வாழ்த்துரை-2
சிவஸ்ரீ சு.சுந்தரராஜகுருக்கள்
வழக்கம்பரை அம்பாள் தேவஸ்தானம், தொல்புரம், சுழிபுரம்.
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவையிட்டு மன மகிழ்ச்சி அடைகின்றோம்.
125 ஆவது நிறைவாக வெளிவரும் மலரையிட்டும் மகிழ்ச்சியடைகின்றோம்.
சுழிபுரம் பிரதேசத்தில் கல்வி வளர்ச்சிக்காக 125 ஆண்டுகள் தன்னிகரில்லாக் கல்வி நிலையமாக விக்ரோறியா அன்னை திகழ்கின்றாள்.
கல்லூரி, சமய, கலாசார - பண்பாட்டு, கல்வி, ஒழுக்கம் பேணுகின்ற உன்னத நிலையமாகத் திகழ்கின்றது. கல்விதான் மனித மேம்பாட்டிற்கு உரியது என்பதை இக்கல்லூரியின் செயற்பாடுகள் உணர்த்துகின்றன.
கல்லூரியின் முன்னைய அதிபர்களாகிய சைவப்பெருந்தகை சு.சிவபாதசுந்தரம் போன்றவர்களாலும், தொடர்ந்து சேவையாற்றிய, ஆற்றுகின்ற அதிபர், ஆசிரியர்கள் அர்ப் பணிப்புடனும் சேவை மனப்பான்மையுடனும் ஆற்றுகின்ற செயற்பாட்டினால் நீதிபதிகள். சட்டத்தரணிகள், டாக்டர்கள், பொறியியலாளர்கள், பண்டிதர்கள், ஆசிரியர்கள், அரசியல் வாதிகள் போன்ற இன்னோரன்னவர்களை ஆக்கிய பெருமை இக்கல்லூரியைச் சாரும்.
அடியேனும் இக்கல்லூரியின் பழைய மாணவன் என்றவகையிலும், அரசாங்கத்தில் உயர்ந்த தொழில்செய்த முறையிலும், தற்போது சமயக் குருவாக இருந்து இக்கல்லூரிக்கு ஆசியுரை வழங்குவதிற் பெருமை அடைகின்றேன்.
கல்லூரி சம்பந்தமான பல்வேறு விடயங்களை ஆவணப்படுத்த இம்மலர் பெரிதும் உந்துசக்தியாக அமையும் என்பது என் அவா.
மலருக்கு ஆசியுரை வழங்குமாறு கேட்டுக்கொண்ட நிர்வாகிகளுக்கும், அதிபர், ஆசிரியர், மாணவர்கள், பழைய மாணவர்கள், கல்லூரி அபிவிருத்திச் சங்கத்தினர், பெற்றோர்கள் எல்லோருக்கும் நன்றி கூறி எல்லாம்வல்ல சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானையும், வழக்கம்பரை மகாமாரி அம்பாளையும் வழுத்தி நல்லாசிகள் உரித்தாகப் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.
This website is developed in May, 2022 and being maintained by JVC OSA, Canada to archive J/Victoria College's historical publications on the Internet for future references.