சூழல் சிறக்க சேவை மலரட்டும்
சி.இரங்கராசா,
பிரதம செயலாளர், வடக்கு கிழக்கு மாகாணம்,
திருகோணமலை.
125 ஆண்டுகளாக கழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி - தனியார் கல்லூரியாக இருந்து, அரசாங்கக் கல்லூரியாக. அரசாங்க மத்திய கல்லூரியாகி - வரலாற்றுச் சாதனைகள் பலவற்றையும் படைத்து எமது சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் இன்றைய நிலையை அடைந்துள்ளது.
இக் கல்லூரி பல அறிஞர்களை அதிபர்களாகவும். ஆசிரியர்களாகவும் கொண்டிருந்ததுடன் - பல அறிஞர்களை உருவாக்கியும் தந்துள்ளது.
இக் கல்லூரியில் கல்விகற்ற மாணவர்கள் இலங்கையில் மட்டுமன்றி உலகில் பல் வேறு நாடுகளிலும் நற்பிரஜைகளாக வாழ்கின்றனர்.
மாணவர்களது முழுமையான வளர்ச்சி எனும் இலக்கினை அடிப்படையாகக்கொண்டு இக் கல்லூரியின் வளங்கள் பல படிமுறைகளில் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்துக் கல்விச் சூழ்நிலை பெரிதும் பின்னடைவைத் தரிசித்த கடந்த தசாப்த கால வரலாற்றின் வடுக்களில் இருந்து மீட்சிபெற்று கல்வித்துறையில் தான் இழந்த மேன்மையை மீண்டும் பெற்றுக்கொள்ள இக்கல்லூரி எதிர்காலத்தில் ஆற்றவேண்டிய கடமைகள் பற்றித் தீர்க்கமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டிய காலகட்டம் இதுவாகும்.
இது பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களது மிகப் பாரிய பொறுப்புமாகும்.
பாடசாலைகள் பரீட்சைகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களைத் தயார் செய்யும் சடத்துவமான பட்டறைகளாகத் தொழிற்பட வேண்டுமா? அல்லது ஒழுக்க நெறியையும், கட்டுக்கோப்பையும், பண்பான வாழ்க்கையையும் போற்றி அனுபலிக்கின்ற நற்பிரஜைகளை அடிப்படையாக உருவாக்கக்கூடிய மேன்மையான பணியை மேற்கொள்ளும் கல்விநிலையங்களாக மாறவேண்டுமா? என்பது பற்றி இத்தருணத்தில் தீவிரமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.
கல்லூரியின் கடந்தகால சாதனைகள், எழுச்சிகள், வீழ்ச்சிகள், பலங்கள், பலவீனங்கள் போன்றவற்றைப் பற்றிச் சிந்திப்பதற்கும், எதிர்காலத்திற்கான ஒரு திசையைப் பற்றிச் சிந்திப்பதற்கும் இந்த நாற்று இருபத்தைத்தாவது ஆண்டுப் பூர்த்தி விழாவை ஒட்டிய வைபவங்கள் ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளன.
இவ் வைபவங்களின் நோக்கங்கள் இனிதே நிறைவேறவும், இக்கல்லூரி தனது சேவைகளை வழங்குகின்ற கிராமங்களின் கல்விமேம்பாட்டில் அக்கறை உள்ளவன் என்ற வகையில் இந்நிகழ்ச்சிகள் பயன் உடையனவாக நிறைவேறவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.
This website is developed in May, 2022 and being maintained by JVC OSA, Canada to archive J/Victoria College's historical publications on the Internet for future references.